ஆன்மீகம்

மகாலட்சுமியின் கதை
பாற்கடலில் மறைந்த செல்வங்களையும், அமிர்தத்தையும் பெற வேண்டி அதைக் கடைவதென்ற முடிவுக்கு வந்தனர் தேவர்கள். பாற்கடலைக் கடைவது தேவர்களால் மட்டும் ஆகாத செயல் என்று கூறி அசுரர்களது வலிமையையும் பெற யுக்தி கூறுகிறார் பிரம்மா. அதன்படியே தேவ-அசுரர்கள் இணைந்து, மந்திர மலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி, கடல்வண்ணன் கூர்மாவதாரமெடுத்து மத்தைத் தாங்க பாற்கடல் கடையப்பட்டது. வலி-தாங்காத இயலாத வாசுகி விஷத்தைக் கக்க, அதை உண்ட பரமன் நீலகண்டன் ஆனார். இவ்வாறு கடைந்த பாற்கடலில் இருந்து முதலில் உச்சைஸரவஸ் என்ற விசேஷக் குதிரை வந்ததாம், பிறகு காமதேனு, கற்பக விருக்ஷம், ஐராவதம், சுரா பானம், சந்திரன் போன்றவை தோன்றியது. இவற்றிற்கு பிறகு தகடையும் தேவாசுரர்கள் வியக்கும் விதமாக மிகுந்த பிரகாசத்துடன், சுகந்தமும், சோபையும், பொருந்திய யுவதி தோன்றினாள். கைகளில் தாமரையுடன் தோன்றிய அவள் அங்கிருந்த பரந்தாமனருகில் சென்று தன்னை அவனுடன் இணைத்துக் கொண்டாள். இவ்வாறு இணைந்த பிறகே தேவர்களுக்கும் தெரிந்தது. நாராயணனைப் பிரிந்த மஹா-லக்ஷ்மிதான் மீண்டும் வந்து அவருடன் இணைந்திருக்கிறார் என்று. ஏன் பிரிந்தார் என்னும் கதை பிறகு ஒருமுறை பார்க்கலாம்.


இவ்வாறு மஹாலக்ஷ்மி வந்த பிறகு தன்வந்திரி தேஜோ ரூபமான அம்ருத கலசத்தை கையில் ஏந்தி பாற்கடலில் இருந்து வெளி வந்தார். இதன் பிறகு மோகினி அவதாரத்தை அறிவோம். தேவர்கள் அம்ருதம் கிடைத்தபின் எல்லாப் போர்களிலும் அசுரர்களை வென்றனராம். இவ்வாறு தேவர்கள் வெற்றிக்கு காரணம் மஹா-லக்ஷ்மி என்று உணர்ந்து அவளைப் பணிந்து போற்றுகிறான். அவ்வாறு தேவேந்திரன் போற்றிய ஸ்லோகத்தை (மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்) இன்று முதல் பாராயணம் செய்து மஹாலக்ஷ்மியை வணங்குவோம்.


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


மஹாமாயையாக ஸ்ரீ பீடத்தில் வாஸம் செய்பவளும், தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும், சங்கு, சக்ரம், கதை போன்றவற்றை கையில் தாங்கியவளுமான மஹாலக்ஷ்மி தங்களுக்கு நமஸ்காரம்.










நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


கருடவாஹனத்தில் அமர்ந்தவளும், கோலாஸுரனுக்குப் பயத்தைக் கொடுப்பவளும், அனைத்து பாபத்தையும் போக்குபவளுமான மஹாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.


ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


அனைத்தையும் அறிந்தவளும், எல்லோருக்கும் விரும்பிய வரங்களைத்தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும், அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.


ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே மஹாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


அணிமா போன்ற ஸித்திகளையும், நல்ல புத்தியைக் கொடுப்பவளும், தேவியும், போகம், மோக்ஷம் ஆகியவற்றைத் தருபவளும் மந்த்ர வடிவானவளும், எப்போதும் பிரகாசிக்கின்றவளுமான மஹாலக்ஷ்மித் தாயே!, உங்களுக்கு நமஸ்காரம்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆதியும், அந்தமும் இல்லாதவளும், முழுமுதற் சக்தியும், மாஹேஸ்வரியும், யோகத்தினாலுண்டானவளும்,யோகத்திற்கு பலமுமான அன்னை மஹாலக்ஷ்மியே உங்களுக்கு நமஸ்காரம்.


ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூலமாகவும், ஸுக்ஷ்மமாகவும், மிக பயங்கரமாகவும், மஹா சக்தியாகவும், விசாலமான வயிற்றையுடையவளும்,மஹா-பாபங்களையும் போக்குபவளுமான தேவியே, மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸனத்தில் அமர்ந்த தேவி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணியும், பரமேஸ்வரியும், உலகிற்குத் தாயுமான மஹாலக்ஷ்மி தேவியே உங்களுக்கு நமஸ்காரம்.


ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
வெண்மையான ஆடையுடுத்திக் கொண்ட தேவி, பற்பல விதங்களி அலங்கரிக்கப்படவளும்,உலகனைத்தும் உள்ளவளும், உலகிற்குத் தாயுமான தாயே!, மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.


மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
எவன் பக்தியுடன் மஹாலக்ஷ்மி அஷ்டகம் என்னும் இந்த ஸ்தோத்திரத்தைப் படிக்கிறானோ!, அவன் அனைத்து ஸித்தியையும், ராஜ்யத்தையும் அடைவான்.


ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:


இந்த ஸ்தோத்ரத்தை தினம் ஒரு முறை சொல்வதால் மஹா-பாபங்களும் விலகும். ஒரு நாளில் இரண்டு முறை சொல்வதால் தனம், தான்யம் முதலியவை உண்டாகும்.
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
இந்த ஸ்தோத்ரத்தை தினசரி காலை, மதியம், மாலை என மூன்று காலமும் படித்தால் மிகப் பெரிய சத்ருக்களையும் வெல்லலாம். எப்போதும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸந்தோஷத்தோடு, கேட்கும் வரங்களையும் மங்களங்களையும் தருபவளாக இருப்பாள்.