Thursday, March 10, 2011

விநாயகர் வரலாறு


படைப்புக் கடவுள் ஆன பிரம்மா தன் படைப்புக்களில் பெருமிதம் கொண்டு, தன்னாலேயே அனைத்தும் நடக்கின்றன என்று ஆணவம் கொண்டார். இந்த ஆணவத்தோடு அவர் படைத்த படைப்புக்கள் பின்னமாகிக் கொண்டு வந்தன. தொடர்ந்து இம்மாதிரிப் பின்னமான படைப்புக்கள் ஏற்படவே பயந்து போனார் பிரம்மா. தன்மேல் என்ன தவறு என யோசித்த போது, அவர் மனதில் தோன்றியது விநாயகருக்கு வழிபாடு செய்வதை நிறுத்தியது தவறு என உணர்ந்தார். உடனேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விநாயகரை நினைத்துத் தியானத்தில் அமர்ந்து முழு மனதோடு அவரைத் தியானித்தார். பிழை உணர்ந்த பிரம்மாவைச் சோதிக்க விரும்பாத விநாயகர் அவர் முன் தோன்றி தமது சக்திகள் ஆன இச்சா சக்தி, ஞான சக்தி இரண்டையும் பிரம்மாவுக்கு அளித்து இவற்றின் உதவியோடு படைப்புத் தொழிலைச் செய்து வரும்படி ஆசி வழங்கினார். படைப்புத் தொழிலை ஆரம்பித்தார் பிரம்மா. விநாயகர் கொடுத்த இரு சக்திகளையும் இரு பெண்களாய் மாற்றி வளர்த்து வந்தார்.
Ganesha - image: Wikipedia
கணபதியின் சக்திகள் கணபதியிடமே போய்ச் சேர வேண்டிய வேளை வந்து விட்டது என உணர்ந்த பிரம்மா, நாரதரை அனுப்பிக் கைலையில் சிவபெருமானிடமும், உமை அம்மையிடமும் விவரத்தைச் சொல்லி வருமாறு அனுப்பி வைத்தார். நாரதரும் கைலை சென்று அம்மை அப்பனிடம் விஷயத்தைத் தெரிவிக்க, மனம் மகிழ்ந்த அம்மை, அப்பன் இருவரும் சித்தி, புத்தி என்ற பெயருடன் வளர்ந்து வந்த அந்த இரு பெண்களையும் கணபதிக்கு மணம் முடிக்கலாம் என்று சொல்லவே, பிரம்மாவும் சந்தோஷத்துடன் உடன்பட்டார். அவ்வாறே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிச்சயிக்கப்பட்ட சுப முகூர்த்த நன்னாளில், சித்தி, புத்தி என்னும் தம் சக்தி தேவிகள் இருவரையும் கணபதி திருமணம் செய்து கொண்டார். நம் தென்னாட்டைப் பொறுத்த வரை கணபதி பிரம்மச்சாரி. ஆனால் வடநாட்டில் அவர் திருமணம் செய்து கொண்ட குடும்பஸ்தர். அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு ஒரு பெண்ணும் உண்டு. அந்தக் கதை வரும் நாட்களில்.
Siddhi-Buddhi Vinayaga - image exoticindiaart.com
இது போலவே விஷ்ணுவும் விநாயகரைப் பூஜித்தே மது, கைடபர் என்னும் இரு அரக்கர்களைச் சம்ஹாரம் செய்ததாகவும் வரலாறு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனின் காதுகளில் இருந்து தோன்றிய இரு அரக்கர்கள் மது, கைடபர் என்னும் இருவர். தோன்றிய கணத்திலேயே அசுர வடிவெடுத்து மூவுலகையும் அச்சுறுத்தி வந்தனர் இருவரும். நான்முகனிடம் சென்று முறையிட்ட தேவர்களை, மகாவிஷ்ணு ஒருவரே இவர்களை அழிக்கத் தகுதி படைத்தவர், ஆகவே அவரிடம் சென்று முறையிடுவோம் என பிரம்மா அவர்களை அழைத்துக் கொண்டு மகாவிஷ்ணுவிடம் வந்து முறையிட்டார். நடந்ததை அறிந்த அனந்த சயனன், தேவர்களுக்கும், பிரம்மாவுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு, மது, கைடபர்களுடன் போருக்குச் சென்றார். ஆயிரக் கணக்கான ஆண்டுகள் யுத்தம் செய்தும் மது, கைடபர்களை மகா விஷ்ணுவால் அழிக்க முடியவில்லை. வெற்றி. தோல்வி இன்றி நீடித்த இந்த யுத்தத்தில் ஏதோ குறை என உணர்ந்த மகாவிஷ்ணு தன் மாயையால் அவ்விடத்தை விட்டு மறைந்து கைலை சென்று ஈசனிடம் வேண்ட, ஈசனும் வேழ முகத்தானை மறந்தது தான் தாமதத்துக்குக் காரணம் என்று சுட்டிக் காட்டினார். ஈசன் சொன்னது போல் விநாயகரை பூஜிக்க பூமிக்கு வந்தார் மகாவிஷ்ணு. மூலப் பொருளை மனதில் வைத்து முழு மனதுடன் பூஜிக்க மகிழ்ந்த விநாயகர் அசுரர்களை அழிக்கும் பராக்ரமத்தை விஷ்ணுவுக்கு அளித்து அருளினார். பின்னர் களம் இறங்கிய எம்பெருமான் நாராயணன், மது, கைடபர்களை அழித்தான் என்கிறது விநாயக புராணம்.

No comments:

Post a Comment