Wednesday, March 23, 2011

சித்தர்கள்


சித்தர்கள்
சித்தர்கள்
சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
அகத்தியர்
அகத்தியர்
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…
 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
 தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!
என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.
அகத்தியரும்..
  மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
                              …………….
  மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!
என்கிறார்.
ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.
மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?
இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!
munivarசித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.
அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். 
சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.  சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.
“ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள  தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?.. “
- இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.
ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என  பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.
சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.
எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

2 comments:

  1. நமது மனது வேலை செய்து கொண்டிருக்கும். சும்மா இருக்கவே இருக்காது! மனம் வேலை செய்தால் வினை நடக்கும் உருவாகும். வினை இருக்க இருக்க மீண்டும் பிறப்பு!
    http://sagakalvi.blogspot.com/2012/01/blog-post_26.html

    ReplyDelete