Thursday, March 10, 2011

எழுத்து மொழியின் தோற்றம்


Pillaiyar
எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம். இல்லையா? அதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகில் முதன் முதல் எழுத ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், வியாசரின் மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்லத் தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதி வந்தவர் பிள்ளையார் தான். அதுவும் எப்படி? வியாசர் சற்றும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார். இவர் எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதிக் கொண்டே போக வேண்டும். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பயமே வந்துடுச்சாம், என்னடா இது! இந்தப் பிள்ளையார் எழுதற வேகத்துக்கு நம்மால் சொல்ல முடியாது போலிருக்கேன்னு. உடனே என்ன செஞ்சாராம் தெரியுமா? நான் சொல்ற ஸ்லோகங்களோட அர்த்தத்தைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று பிள்ளையாரிடம் சொல்லி விட்டார். வேதமுழு முதல்வனான பிள்ளையாரைச் சோதனை போட்டால் சரியா வருமா? அவரும் அப்படியே சரின்னு அர்த்தம் புரிந்து கொண்டு எழுத ஆரம்பித்தாராம். இதுக்காகவே ரொம்ப யோசித்து, யோசித்துச் சிக்கலான பதங்களையும், அர்த்தங்களையும் கொண்ட ஸ்லோகங்களை வியாசர் சொல்ல, விநாயகர் மெளனமாய் அதன் பொருளை உணர்ந்து எழுதி வந்தார். பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில், பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள “மானா” என்னும் கிராமத்தில் உள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம்.
பிள்ளையார் சுழிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சுழி என்பதே வளைசல், வக்ரம் என்றுதான் அர்த்தம். விநாயகரின் தும்பிக்கை வளைந்து சுருட்டிக் கொண்டு இருக்கிறது அல்லவா? பிள்ளையார் சுழி எப்படிப் போடுகிறோம்? முதலில் ஒரு வட்டம், அதுவும் அரை வட்டம், பின் ஒரு நேர்கோடு. பொதுவாய்ச் சக்கரங்கள் சுற்றுவதற்கு மத்தியில் ஒரு அச்சு வேண்டும். அந்த அச்சு வளையாமல் நேராக இருந்தால் தான் சக்கரம் சுற்றும். நாம் தீபாவளிக்கு விஷ்ணு சக்கரம் சுற்ற ஒரு நேரான கம்பியைத் தான் உபயோகிக்கிறோம் இல்லையா? அது போல்தான். இந்த உலகும், கிரகங்கள் அனைத்தும் வட்டமாய்த்தான் சுற்றி வருகின்றன, சூரிய சந்திரர் உள்பட. ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஆதாரமான சக்தி இருக்கும் இல்லையா? அது ஒரு நேர்கோடாய்த் தான் இருக்க முடியும். இதை நினைவு கூரவும் நாம் வட்டத்தை அரை வட்டமாய்ப்போட்டு விட்டுப் பின் ஒரு நேர்கோடு போடுகிறோம். மின்சாரம் எடுக்க எப்படி நீர்த்தாரையில் இருந்து சக்கரங்களை இணைத்து, அதாவது வட்டத்தில் இருந்து நேர்க்கோடாக மின்சாரத்தை எடுக்கிறோமோ அது போல்தான் இதுவும்.
“அ”, “உ”, “ம” மூன்றும் இணைந்தது தான் “ஓம்” என்னும் பிரணவம். அதை ஆங்கிலத்தில் எழுதும்போது “AUM” என்றே எழுத வேண்டும். இந்த அரை வட்டத்தில் ஆரம்பித்து நேர்கோடாக முடிகிற பிள்ளையார் சுழிக்கு இது தான் அர்த்தம். சிவசக்தியின் ஐக்கியத்தையும் குறிக்கிறது. “அ” என்ற சிருஷ்டியில் ஆரம்பித்து “உ” என்ற எழுத்தால் காப்பாற்றப் பட்டுக் கடைசியில் “ம” என்னும் எழுத்தால் சம்ஹாரம் செய்யப் படுகிறோம் அல்லவா? இந்த மூன்றில் நடுவில் உள்ள காக்கும் எழுத்தையே பிள்ளையார் சுழியாகப் போட்டு, அனைத்துக்கும் ஆதாரமும் இவரே, முடிவும் இவரே, சரணும் இவரே என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
Categories:

No comments:

Post a Comment