Tuesday, March 22, 2011

கதிர்வீச்சு


புதைக்க ஜப்பான் யோசனை!
டோக்கியோ: அணுக் கதிர்வீச்சு அபாய கட்டத்தில் உள்ளதால், பேரழிவைத் தவிர்க்கும் பொருட்டு ஃபுகுஷிமாவின் அணு உலைகளை மண்ணுக்குள் புதைக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ஜப்பானில் கடந்த 11-ந் தேதி, பூகம்பமும், சுனாமியும் தாக்கி பேரழிவை உண்டாக்கின. ஃபுகுஷிமா என்ற இடத்தில் 6 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 4 அணு உலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து அணு கதிர்வீச்சு வெளியாகி வருகிறது. மேலும், அந்த அணு உலைகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. இதனால் மின்சார சப்ளையும் அறுந்தது.

மின்சாரம் இல்லாமல், தண்ணீர் ஏற்ற முடியாததால், அணு உலைகளில் உள்ள குளிரூட்டும் தொட்டிகள் நீரின்றி வறண்டு விட்டன. இதனால், அணு உலைகள் மேலும் சூடாகி வரும் நிலையில், கதிர்வீச்சு அதிகரிக்கும் அபாயமும் எழுந்துள்ளது. இதனால் அணு உலைகளை குளிரூட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

ஹெலிகாப்டர்கள் மூலம் கடல்நீரை ஒரு ராட்சத தொட்டியில் எடுத்து, அணுஉலைகள் மீது கொட்டி, அவற்றை குளிரூட்டி வருகிறார்கள். ஆனால் அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

மின்சப்ளை:

இதையடுத்து, அணு உலைகளுக்கு மின் சப்ளையை புதுப்பிக்கும் பணிகளில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர். மின்சப்ளை கொண்டுவரப்பட்டால், தண்ணீர் மோட்டாரை இயக்க முடியும் என்பதால், அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், பூகம்பத்தால், அணுஉலை மோசமாக பாதிக்கப்பட்டதால், மின்சப்ளை கொண்டுவரப்பட்டால்கூட, தண்ணீர் மோட்டார் செயல்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. மேலும், மின்கசிவு ஏற்பட்டு, மீண்டும் வெடிவிபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

மண்ணில் புதைக்கத் திட்டம்:

இந்த சூழ்நிலையில், அணு உலைகளை மண்ணிலும், கான்கிரீட்டிலும் புதைப்பது பற்றி ஜப்பான் பரிசீலித்து வருகிறது. கடந்த 1986-ம் ஆண்டு, உக்ரைன் நாட்டில் செர்னோபில் அணு உலையில் இருந்து கடுமையான கதிர்வீச்சு வெளியானபோது, இதுபோன்றுதான், அந்த அணு உலையை மண்ணில் புதைத்து, கதிர்வீச்சை தடுத்தனர்.

எனவே, அதே பாணியில், புகுஷிமா அணு உலைகளையும் மண்ணில் புதைப்பதுதான் கதிர்வீச்சை தடுக்க ஒரே வழி என்று என்ஜினீயர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போதைய நிலையில், அணு உலைகளுக்கு மின்சப்ளையை கொண்டுவருவதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 

இத்தகவலை ஜப்பான் அணுசக்தி கழக செய்தித்தொடர்பாளர் ஹிடேகிகோ நிஷியாமா தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமைக்குள், 2 அணு உலைகளில் மின்சப்ளை கொண்டுவரப்படும் என்று ஓர் அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.

நிபுணர் குழு ஜப்பான் விரைந்தது...

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட அணு உலைகளை நேரில் பார்வையிடுவதற்காக, சர்வதேச அணுசக்தி கழக தலைவர் யுகியா அமனோ நேற்று 4 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் ஜப்பான் சென்றார்.

No comments:

Post a Comment