Tuesday, December 7, 2010

இயற்கை வேளாண்மை

1. உழுத நிலம் கேட்பதில்லை வனத்தில் முளைக்கும் விதைகள்

2.மழை மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது.

3. இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.

4. இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்


5. சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசு படுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன.


6. நிலம் , நீர் , மரம் , பூச்சி -- இவைகளை அப்படியே விட்டுவிட்டு விளைச்சல் பெரும் வேளாண்மைதான் இயற்கை வேளாண்மை


7. உற்பத்திக்கு பயன்படுத்திய சக்தியை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தாலே இயற்கை வேளாண்மை மட்டுமே சிறந்த வேளாண்மை என்பது புரியும்


8. எந்த இயற்கைக்குத் திரும்ப மனிதன் ஆசையோடு முயற்சிக்கிறானோ, அந்த இயற்கையின் அடிப்படையே ,மாறி நிரந்தரமாக வேறுபட்டு விட்டால், எப்படி அதை அடைவது?


9. உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் 
அனுபவிக்கமுடியும்.



இயற்கை முறை காய்கறி சாகுபடி குறிப்புகள் மற்றும் இயற்கை உரமிடுதல்: வேளாண் பயிர்க் கழிவுகளை மக்க வைத்து இயற்கை தொழு உரம் தயார் செய்துவிடலாம். பசுந்தாள் உரங்களை தக்கைப்பூண்டு, அகத்தி, சணப்பை, கொளிஞ்சி போன்றவற்றை பயிரிட்டு மக்க வைத்து பயன்படுத்தலாம். கம்போஸ்ட் எரு, தொழுஉரம், கோழி எரு, பன்றி எரு, கம்போஸ்ட் கரும்பு ஆலை கழிவு எரு, தென்னை நார் கழிவு எரு ஆகியவற்றை பயன்படுத்தலாம். புண்ணாக்கு வகைகளான வேம்பு, ஆமணக்கு, புங்கம், இலுப்பை, தென்னை கடலை எள், காட்டாமணக்கு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
மண்புழு உரமிடுதல்: இந்த உரத்தில் பயிருக்கு தேவையான சத்துக்கள் மட்டுமல்லாமல் பயிருக்கு தேவையான இயற்கை பயிர் ஊக்கியும் இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாகும். இதை அடியுரமாக இடுவதை விட முக்கியமாக காய்கறிப் பயிர்களுக்கு ஏக்கருக்கு 2-3 டன் உரத்தை மேலுரமாக செடிகளை சுற்றி, செடி விதைத்த 20 நாள்களுக்கு ஒருமுறை வீதம் 3 முறை இடுவது நல்லது.
நுண்ணுயிர் உரங்கள் இடுதல்: காய்கறிப் பயிர்கள் நன்கு செழித்து வளர செலவில்லாத நுண்ணுயிர் உரங்களான ரைசோபியம், பாஸ்போபேக்டீரியா, அசோஸ்பைரில்லம், மைக்கோரைசாவேர் உட்பூசணம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டை, உதாரணமாக ரைசோபியம் பால்போபாக்டீரியா (அலலது) ரைசோபியம் மைக்கோரைசாவேர் உட்பூசணம் (அல்லது) அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற விகிதத்தில் கடைசி உழவுக்கு முன்பு இட வேண்டும். ÷அடியுரமாக இடமுடியாத தருணத்தில், விதை நேர்த்தியாக கூட பயன்படுத்தலாம், மேற்கூறிய உயிர் உரங்களை ஏக்கருக்கு 2 பாக்கெட் என்ற விகிதத்தில் குளிர்ந்த அரிசிகஞ்சியுடன் கலந்து விதைகளை விதைப்பதற்கு முன் நிழலில் 6 மணி நேரம் உலரவைத்து விதைக்க வேண்டும்.
இயற்கை முறையில் விதை நேர்த்தி: சூடோமோனாஸ் 10 கிராம் கிலோ அல்லது டிரைகேடெர்மா 4 கிராம்கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். ஒரு சதுர மீட்டர் நாற்றங்காலுக்கு தொழு உரம் 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு, அசோஸ்பைரில்லம் 5 கிராம், பாஸ்போபேக்டீரியா 5 கிராம் மற்றும் மைக்கோரைசாவேர் உட்பூசணம் 60 கிராம் என்ற அளவில் இடலாம். விளைநிலங்களில் அசோஸ்பைரில்லம் 400 கிராம் கரைசலில் நாற்றுகளின் வேர்களை நனைத்தல், ஓரு ஹெக்டேர் நிலத்துக்கு 2 கிலோ பாஸ்போபாக்டீரியா மற்றும் மைக்கோரைசாவேர் உட்பூசணம் 4 கிலோ என்ற அளவில் இடலாம். மண்புழு உரம் மறறும் வேப்பம் புண்ணாக்கு இடலாம், பஞ்சகாவியாவை பாசனநீர் மூலம் கலந்து விடலாம். முருங்கை இலைச்சாற்றை மேலுரமாக தெளிக்கலாம்.
நுண்ணுயிர்களின் பங்கு: மண்ணிற்கு நுண்ணுயிர்கள் மக்கவைக்கும் இயல்பை தருகிறது. ஒளிச்சேர்க்கை செய்வதை துரிதப்படுத்திவிடும் லேக்டிக் அமில பாக்மரியா மண் மற்றும் உரங்களில் உருவாகும் தீமை தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்தக்கூடும். இந்த நுண்ணுயிர்களை மண்ணிலும், உரத்திலும் நீரிலும் தெளிப்பதன் மூலம் உற்பத்தியை பெருக்கி கூடுதல் மகசூலைப் பெறலாம்.
நுண்ணுயிர் கரைசல் தயாரிப்பு முறை: 20 லிட்டர் தண்ணீரில் (குளோரின் கலக்காதது) 1 கிலோ நாட்டு சர்க்கரை கலந்து அதனுடன் 1 லிட்டர் நுண்ணுயிர் கரைசல் கலந்து இவை அனைத்தையும் 20 லிட்டர் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து இருட்டான, குளிர்ச்சியான அறையில் 10 நாள்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். இதிலிருந்து இனிமையான மணம் உருவாகும். இக்கரைசலை கம்போஸ்ட்கள் மீதும் மற்றும் விவசாய சாகுபடி செய்யக்கூடிய மண்ணின் மீதும் தெளிக்கலாம். நுண்ணுயிர் கரைசல் புதுச்சேரி ஆரோவில்லில் கிடைக்கிறது. எனவே விவசாயிகள் இயற்கை வேளாண்மையை பயன்படுத்தி சாகுபடி பொருள்களின் தரத்தை உயர்த்தி அதிக லாபம் பெறலாம் .

No comments:

Post a Comment